சனி பெயர்ச்சி பலன்கள் (2026-2028):மேஷம்
பொதுவுடமை சிந்தனை உள்ள உங்களுக்கு ஏழரை சனியின் தொடக்கமாக அமைகிறது. வாக்கிய பஞ்சாங்கப்படி 06.03.2026 முதல் 24.04.2008 வரை விரைய சனியாக அமருகிறார் சனி பகவான். ‘ஏழரைச் சனி ஆரம்பிச்சிடுச்சு… இனி என்ன செய்வது? என்று பதற வேண்டாம். விரைய வீட்டில் அமரும் சனி நிச்சயம் யோக பலனையே கொடுப்பார். அவர் ராசிக்கு 12-ல் மறைவதால் இழுபறியான பல காரியங்கள் இனி விரைந்து முடியும்.
இதுவரை உங்கள் ராசியின் மீது விழுந்த சனியின் பார்வை இனி விலகுவதால் பேச்சில் கம்பீரம் இருக்கும். தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கும் மாறுபட்ட அணுகுமுறையால் பேசி தீர்வு காண்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் நல்ல மாற்றம் உண்டாகும். அவர்களின் விருப்பங்களை கேட்டு அறிந்து பூர்த்தி செய்வீர்கள். வீட்டில் நல்லது நடக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று வாருங்கள்.

சனி பார்வை பலன்கள்
சனிபகவான் 6ம் வீட்டை பார்ப்பதால் கடன் துயரிலிருந்து மீண்டு வருவீர்கள். சகோதர, சகோதரிகளின் ஆதரவு உண்டு. தாய் வழியில் சொத்து வரும். நாடாளுபவர்கள், அரசு உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். சொந்த பந்தங்களின் ஆதரவு இருந்தாலும், அவர்களால் செலவுகளும் இருக்கும்.
சனிபகவான் உங்களின் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் பணவரவுக்கு குறைவிருக்காது என்றாலும் வீண் செலவுகள், வாக்குறுதி கொடுப்பது, வீண் பேச்சு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. கண் எரிச்சல், பார்வைக் கோளாறு வரக்கூடும்.
சனிபகவான் உங்களின் 9ம் வீட்டை பார்ப்பதால் தந்தையின் உடல் நலலில் கவனம் செலுத்துங்கள். நெஞ்சு வலி, கை கால் வலி, அசதி வந்து நீங்கும்.
பரிகாரம்
சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் சிவாலயங்களுக்கு சென்று அங்குள்ள சனி பகவானை வணங்கி வாருங்கள். மனநலம் குன்றியவருக்கு உதவுங்கள் மகிழ்ச்சி தங்கும்.




Leave a reply