சனிப்பெயர்ச்சி பலன்கள் (2026-2028):சிம்மம்
பெரும் சிந்தனையாளரான சிம்மராசி அன்பர்களே! முயற்சியால் பல வெற்றிகளை ஈட்டும் வல்லவர். உங்கள் ராசிக்கு வாக்கிய பஞ்சாங்கப்படி 06.03.2026 முதல் 24.4.2028 வரை 8ம் வீட்டில் அமர்கிறார் சனி பகவான். ஆகவே எங்கும், எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அவ்வப்போது எதிர்மறை சிந்தனைகள் தலைதூக்கும்.
கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து போகும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கொஞ்சம் கடன் வாங்க வேண்டி வரும். பிள்ளைகளின் கல்வி, வேலை சம்மந்தமாக முக்கிய பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். அத்தியாவசிய செலவுகள் ஏற்பட்டு கையிருப்பைக் கரைக்கும். பூர்வீக சொத்தின் பங்கை போராடி பெறுவீர்கள். நெருக்கமானவர்களாக இருந்தாலும் குடும்ப விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. குலதெய்வ பிரார்த்தனை உங்களை பலப்படுத்தும்.

சனி பார்வை பலன்கள்
சனி பகவான் உங்கள் ராசிக்கு 2ம் வீட்டை பார்ப்பதால் எதிர்பாராத திடீர் பணவரவு உண்டு. சாதூர்யமாக பேசி காரியங்களை முடிப்பீர்கள். எனினும் சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு பேசி,சிக்கிக்கொள்வீர்கள்.
சனிபகவான் உங்களின் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் நல்லவர் யார் கெட்டவர் யார் என அறிய முடியாமல் தவிப்பீர்கள். குடும்பத்தினரின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
சனி பகவான் உங்கள் 10ம் வீட்டை பார்ப்பதால் வேலை மற்றும் தொழிலில் கவனம் அவசியம்.அதிக கடன் வாங்கி தொழிலை விரிவுபடுத்த வேண்டாம்.கூட்டு தொழிலில் கவனம்.
பரிகாரம்:
சனிக்கிழமை சனி ஓரையில் ஆஞ்சநேயர் வழிபாடு உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற பிரச்சனைகளுக்கு தீர்வை அளிக்கும். முதியோர் இல்லங்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். நீங்கள் நினைத்தது நடக்கும்.




Leave a reply