விசுவாவசு வருட பஞ்சாங்கம்
மங்களகரமான விசுவாவசு வருடம் சித்திரமாதம் ஒன்றாம்தேதி திங்கட்கிழமை, பிரதமை திதி, அமிர்த/மரணயோகம் கூடிய தினத்தில், அமிர்த யோகம் அமைந்த நேரத்தில், (14.4.2025) பிறக்கிறது.
அதேசமயம், ஜோதிடசாஸ்திரத்தின்படி சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்லும் நேரமே மாதப்பிறப்பு என்பதாகக் கொள்ளப்படும். அந்த வகையில் சூரியன் மீனம் ராசியில் இருந்து மீனம் ராசிக்குச் செல்லும் நேரமே சித்திரை மாதப்பிறப்பாகக் சொல்லப்படுகிறது.
அந்த அடிப்படையில், இந்தத் தமிழ்ப் புத்தாண்டாகிய விசுவாவசு வருட சித்திரை மாதம், குரோதி ஆண்டு பங்குனி மாதம் 30ம் தேதி (13.4.2025) ஞாயிற்றுக்கிழமை, நள்ளிரவு 02.22 மணிக்கு மகர லக்னம், ஸ்வாதி நட்சத்திரம், சூரியன் ஓரையில் பிறக்கிறது. அதுவே விசுவாவசு வருடம் பிறக்கும் நேரமாக கணக்கிடப்படுகிறது.
அறுபது தமிழ் வருடங்களுள் 39 வது ஆண்டு, விசுவாவசு வருடம்.

விசுவாவசு வருட வெண்பா
விசுவாவசு வருடம்வெள்ளாண்மை யேறும்
பசு ஆடும் மாடும் பலிக்கும் சிசுநாசம் மற்றையரோ வாழ்வார்கள் மாதவங்கண் மீறுமே உற்றுலகில் நல்ல மழையுண்டு.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இடைக்காடர் எனும் சித்தரால் ஒவ்வொரு ஆண்டிலும் அமையக்கூடிய கிரஹ நிலைகள் போன்றவற்றின் அடிப்படையில் அறுபது தமிழ் ஆண்டுகளுக்கும் இயற்றப்பட்ட வெண்பா பாடல்களுள் இது, விசுவாவசு வருடத்திற்கு உரியது.
இந்த வெண்பாவின் பலனே, இந்த ஆண்டுக்கான பொதுப்பலன்களில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வெண்பாவின்படி, இந்த விசுவாவசு ஆண்டில் உலகம் முழுக்க நல்ல மழைபெய்யும், விளைச்சல் அதிகரித்து உணவுப்பஞ்சம் நீங்கும். ஆடு, மாடுகள் கால்நடைகள் வளம் பெருகும். புதிய நோய் பரவலால், சிறு குழந்தைகளுக்கு பாதிப்புகள் வரக்கூடும். மழை சீராக இருக்கும், மழை நீரை சேமிக்கத் தவறினால், அது வீணாகிக் கடலில் கலக்கும். புதிய சட்டதிட்டங்கள் மத்திய அரசு, மாநில அரசுகளால் விதிக்கபபடும். குற்றங்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்படும். பக்தி மார்க்கத்தில் மக்களுக்கு நாட்டம் அதிகரிக்கும்.
இந்த ஆண்டு பிறக்கும் நேரத்தில் அமையும் கிரஹநிலைகள் மற்றும் இந்த ஆண்டில் இடம்பெயரக் கூடிய சனி, குரு, ராகு-கேது கிரஹங்களின் இடமாற்றத்தால் ஏற்படக்கூடிய பலன்கள் போன்றவற்றின் அடிப்படையில் இந்தஆண்டின் பொதுப்பலனைக் கணக்கிடும்போது பின்வரும் விஷயங்களைச் சொல்லமுடிகிறது.
உலகம் முழுக்க ஒருவித பதற்ற நிலை காணப்படும். அதேசமயம், உரிய நடவடிக்கைகளால், தீவிரவாதம், தீயோர் அசுறுத்தல் போன்றவை. தடுக்கப்படும். நாடுகளின் எல்லைப்பகுதிகளில் போர் அச்சம் நிலவும். இந்தியாவைப் பொருத்தவரை எல்லைப்பாதுகாப்பு அதிகரிக்கப்படும். மேலும் ராணுவத்தில் புதிய ஆயுதக் கண்டுபிடிப்புகளால் பகைவர்களின் கொட்டம் அடக்கப்படும்.
அரசு, அரசியல், சினிமா, விளையாட்டு, வர்த்தகம், கலை, ஆன்மிகம் என்று சகல வகைகளிலும் பிரபலமானவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த வேண்டிய அவசியம் உண்டாகும். மேலும், தலைவர்கள், உயர்பொறுப்பில் உள்ளவர்கள், பிரபலங்கள் போன்றோர் உடல்நலத்தில் கவனம் செலுத்துவதும் அவசியமாகும்.
இந்தியாவில் மருத்துவம், விஞ்ஞானம் வானியலில் புதிய கண்டுபிடிப்புகள் நிகழும். இதுவரை கோலோச்சிய உலகப் பெரும் நாடுகளுக்கு நிகராக இந்தியாவின் பெருமையும் மேலோங்கும். உலக அளவில் பரவக்கூடிய புதிய நோய்க்கு இந்தியாவின் மருத்துவ ஆய்வினால் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும். பக்தி மார்க்கத்தில் மக்களிடையே நாட்டம் அதிகரிக்கும். அரசியலில் பெரும் அளவில் மாற்றம் ஏற்படும். இதுவரை முடங்கிக் கிடந்த சில அரசியல்வாதிகள் திடீர் எழுச்சிபெற்று, பதவிகள் வகிக்கக் கூடும்.
ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடை வளர்ச்சி சீராகும்.வனவிலங்குகள் நகருக்குள் வருவதால் ஏற்படும் சங்கடங்களைத் தவிர்க்க, வன ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு, புதிய சட்டங்களும் ஏற்படுத்தப்படும். குறிப்பாக யானைகளைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மொத்தத்தில் இந்த ஆண்டு நன்மைகள் அதிகரிக்க, பக்தி மார்க்கத்தில் நாட்டம் செலுத்துவது, சகோதரத்துவத்தை வளர்த்துக்கொள்வது, அவரவர் குல தெய்வத்தை ஆராதிப்பது, பெற்றோர் பெரியோரை மதிப்பது இவற்றையெல்லாம் கடைபிடித்தல் அவசியம்,
மேலும் மரங்களை வளர்ப்பது, நீர்நிலைகளை பேணிக்காப்பது, நீர்வழி ஆக்ரமிப்புகளை அகற்றுவது, தனிமனித ஒழுக்கத்தைப் பேணுவது இவையெல்லாம் நற்பலன் தரும்.
அவரவர் முறைப்படியான குலதெய்வ வழிபாடுகளைச் செய்யுங்கள். எப்போதும் நல்லதையே நினைத்து நல்லதையே செய்யுங்கள். விசுவாவசு வருடம் முழுக்க உங்களுக்கு எல்லா நாளும் திருநாளாகும். அதற்கு கிரஹங்களின் அனுகிரஹமும் ஆண்டவன் ஆசியும் கிட்டும்.
விசுவாவசு வருட பஞ்சாங்கம் PDF
விசுவாவசு வருட [2025-2026] நவ நாயகர்கள் பலன்
ராஜா – சூரியன்:
நாட்டில் தலைமைப்பதவி வகிப்போர், பிரபலங்கள் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இயற்கை செழிக்கும். மழைவளம் அதிகமாக இருக்கும். அதேசமயம், சேமிப்பு இன்மையால் வீணாகக் கடலில் கலக்கும். நாட்டின் வடபகுதியில் வெயில், குளிர் தாக்கம் அதீதமாக இருக்கும். உச்சபட்ச வெயிலால் பனிமலை உருக நேரிடும். எல்லையில் அந்நியர் தலையீடு அதிகரிக்கும். என்றாலும் முடிவில் அது முறியடிக்கப்படும். மலைப் பிரதேசங்களில் நிலச் சரிவுகள், மழை அரிப்பினால் பாதிப்புகள் ஏற்படும். அரசியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும். மூத்த தலைவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும். புதிய நோய்கள் பரவினாலும் தகுந்த நேரத்தில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, பெரும் பாதிப்பு தவிர்க்கப்படும்.
மந்திரி – சந்திரன்:
புனித தலங்களில் சச்சரவுகள் ஏற்படும். மழை அதிகரிப்பினால் சேதம் ஏற்படும். தலைநகரில் தீவிபத்துக்கு வாய்ப்பு உண்டு. வான்வழி போக்குவரத்தில் சங்கடங்கள் தலைதூக்கும். வெளிநாடுகளில் குழப்பசூழல் உண்டாகும். அந்நிய நாட்டு சதிகள் முறியடிக்கப்படும். இந்திய வான்வெளி ஆராய்ச்சிகளால் ஆதாயம் ஏற்படும். மலை, கடல் சார்ந்த பகுதிகளில் இயற்கை சீரழிவு நேரிடும். விவசாயம் செழிக்கும். பயிர்கள் உற்பத்தி பெருகும். எனினும் எதிர்பாரா வெள்ளம், மழையால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தகுந்த பாதுகாப்பீடுகள் செய்துகொள்வது நல்லது.
அர்க்காதிபதி – சூரியன்:
அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். கடல் நீர் மட்டத்தில் மாறுதல்கள் ஏற்படும். மலை சார்ந்த பகுதிகளில் பெரும் இயற்கை சீரழிவு ஏற்படும். பூமியின் கீழிருந்து புதையல் கண்டுபிடிக்கப்படும். கடல்வழிப் பயணத்தில் பாதிப்புகள் ஏற்படும். அரசின் புதிய வரிவிதிப்புகளால், தானியங்களின் விலை உயரும். போக்குவரத்தில் புதிய முன்னேற்றம் ஏற்படும். இரசாயனக் கழிவுகளால் விபத்துகள் நேரிடும். பணப்புழக்கம் குறையும். பூமிசார்ந்த வர்த்தகங்களில் சரிவு ஏற்படக்கூடும்.
சேனாதிபதி- சூரியன்
நாட்டின் பாதுகாப்பில் அச்சுறுத்தல்கள் ஏற்படும். அதேசமயம் சரியான சமயத்தில் அவை தடுக்கப்படும். உயர் பதவியில் உள்ளவர்களுக்கு சங்கடங்கள் தலை தூக்கும். விலைவாசி உயரும்.வங்கிகளின் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டிய சூழல் உருவாகும். சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரிக்கும். அரசியல் கூட்டணிகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ரஸாதிபதி – சனிபகவான்:
வயதில் மூத்தவர்களுக்கு மதிப்பு, மரியாதை உயரும். நோய்களின் தீவிரம் தலைதூக்கினாலும் முடிவில் கட்டுப்படுத்தப்படும். தங்கம், வெள்ளி விலையில் தாறுமாறான நிலை ஏற்படும். பிரபலங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். புதிய வகை வரிகளால் அரசுக்கு வருமானம் அதிகரிக்கும். கனரகத் தொழிற்சாலைகளில் நெருப்பு, மின்சாரம், ரசாயனம் சார்ந்த விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கரும்பு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் விளைச்சல் அதிகரிக்கும். நீதி, நேர்மை தவறுவோர்க்கான தண்டனைகள் கடுமையாக்கப்படும்.
தான்யாதிபதி – செவ்வாய்
பூமி சார்ந்த வர்த்தகத்தில் வளர்ச்சி ஏற்படும். பருவமழை குறையும்.அதேசமயம் துவரை, பயறு வகைகள் விளைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத இயற்கை சீற்றம் ஏற்படும். நிலநடுக்கம், போர் ஆபத்து, பங்கு வர்த்தகத்தில் திடீர் சரிவு என சங்கடங்கள் தோன்றும். கால்நடைகள் இனம் புரியாத நோயால் பாதிக்கப்படலாம் என்றாலும் முறையான மருந்துகள் கண்டுபிடிக்கப்படும். எல்லை பகுதியில் அந்நிய ஊடுருவல் கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்படும்.
மேகாதிபதி – சூரியன்:
வான்வழி போக்குவரத்து அதிகரிக்கும். அதேசமயம் ஆகாயத்தில் ஏற்படும் பனி, மேகமூட்டம் போன்றவற்றால் விமான இயக்கத்தில் தடைகள் ஏற்படும். எதிர்பாராத விபத்துகள் நாட்டின் தலைமை ஸ்தலங்களில் ஏற்படக்கூடும். பருவகாலத்தில் மழைப் பொழிவு தீவிரமாகும். பழைய மற்றும் வலுவில்லாத கட்டடங்கள் இடிபாடடைந்து விபத்துகள் ஏற்படலாம். உஷ்ணாதிக்க நோய்கள் பரவ வாய்ப்பு உண்டு. மக்களிடையே சகோதரத்துவம் மேலோங்கும்
நீரஸாதிபதி – புதன்:
பயிர்கள் வளர்ச்சியால் விவசாயம் செழிக்கும். கல்வி முறையில் வியக்கத்தக்க மாற்றம் ஏற்படும். மாணவர்களின் கற்கும் திறன் அதிகரிக்கும். கல்விச் சுமை குறைந்தாலும் கல்விக்கட்டணம் அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு. பணத் தேவை அதிகரிக்கும். அந்நிய நாடுகள் அத்துமீறலும் அது பின்னர் அடக்கப்படுவதும் நிகழும். தங்கம், வெள்ளி வர்த்தகம் வளர்ச்சி நிலையில் இருக்கும். தொழில் ஒப்பந்தங்கள் அதிகரித்து, வேலை வாய்ப்பு ஏற்படும். ஞான மார்க்கம் அதிகரிக்கும்.
சஸ்யாதிபதி – குருபகவான்:
இந்தியவின் படைபலம் அதிகரிக்கும். புதியவகை ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படும். வான்வெளி ஆராய்ச்சிகளில் பெரும் சாதனைகள் நிகழும். மஞ்சள் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் விற்பனை அதிகரிக்கும். பயிர்வகைகள் விளைச்சல் சீராக இருக்கும். கல்வி, கலைகளில் ஆர்வம் மேலோங்கும். மகான்கள், சித்தர்களின் அற்புதங்கள் வெளிப்பட்டு, ஞானமார்க்க ஈடுபாடு அதிகரிக்கும்.
பசு நாயகர் கோபாலன்
உரிய காலங்கள் மழை பெய்யும். அதே சமயம் மழை நீரை சேமிப்பதற்கு உரிய முன்னேற்பாடுகளைச் செய்யாமல் போனால், வெள்ளத்தால், நீர்வழிப்பாதையில் சீரழிவுகள் ஏற்படுவதோடு, நீரும் வீணாகக் கடலில் கலக்கும். கால்நடைகளால் லாபம் அதிகரிக்கும். புதுவகை நோயின் தாக்கம் ஏற்பட்டாலும் உரிய மருந்துகளால் கட்டுப்படுத்தப்படும். ராணுவத் தளவாடங்கள் கண்டுபிடிப்பினால், நம் நாட்டின் பாதுகாப்பும், பிற நாடுகளிடையே மதிப்பும் உயரும். மருத்துவத் துறையில் பல அற்புதக் கண்டுபிடிப்புகள் நிகழும்.
நவ நாயகர்கள் பொது பலன்
பொதுவாக இந்த விசுவாவசு ஆண்டில் சீரான மழைபெய்யும். மக்களிடையே ஒற்றுமை உணர்வு அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் நாட்டம் ஏற்படும். மலைப்பாங்கான பிரதேசங்களில் எதிர்பாரா இயற்கைச் சீரழிவுகள் தலைதூக்க்க் கூடும். தேவையற்ற வாக்குறுதிகளால், சில அரசியல் கட்சிகளின் மதிப்பு அடிமட்டத்துக்குச் சென்று, அரசியலில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. விவசாயத்தில் மரபுவழிப் பயிரிடலில் நாட்டம் மேலோங்கும். தீவிரவாதிகளின் ஆட்டம் தலைதூக்கும். என்றாலும் தகுந்த நடவடிக்கைகளால் அது ஒடுக்கப்படும். கல்வி அமைப்பில் மாற்றங்கள், பலரால் ஏற்கப்படும். மக்களிடையே சகோதர மனப்பான்மை ஏற்படும். மகான்கள், புகழ்பெற்ற மடாதிபதிகளை மக்கள் வணங்குவது அதிகரிக்கும்.
பெண்களின் ஆதிக்கம் பலதுறைகளிலும் மேன்மை அடையும். தொழில் வளர்ச்சியும் அதனால் வேலை வாய்ப்பும் உண்டாகும். அதேசமயம் உழைப்புக்கு ஏற்ற ஊதியமே கிட்டும் என்பதால், சோம்பலைத் தவிர்த்து திட்டமிட்டு செயல்படுவோர்க்கு நன்மைகள் அதிகரிக்கும்.
குலதெய்வத்தை மறக்காமல் கும்பிடுவது. பாரம்பரியம் மிக்க கோயில்களுக்குச் செல்வது. மகான்களை வணங்குவது. பெற்றோர், பெரியோர்க்கு உரிய மரியாதை அளிப்பது. ஏழை எளியோர்க்கு இயன்ற உதவி களைச் செய்வது போன்றவை இந்த விசுவாவசு வருடம் முழுக்க வாழ்வில் வசந்தம் வீசச்செய்யும்.
விசுவாவசு வருட [2025-2026] ஆதாய ,விரய விவரங்கள்

மங்களகரமான இந்த விசுவாவசு வருடத்தில் விரையத்தை விட ஆதாயம் அதிகமாக இருப்பதால் பல நல்ல பலன்கள் ஏற்படும். குறிப்பாக அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றம் வரும். மக்களுக்கு கூடுதல் பலன் தரும் வகையில் வரி விதிப்பு முறையை மத்திய அரசு மாற்றம் செய்யும். ஏற்றுமதி வர்த்தகத்திற்கு சுணக்கம் ஏற்படக்கூடும். விலை உயர்ந்த தங்கம், வைரம், வெள்ளி போன்றவற்றின் விலை உச்சபட்சத்தை எட்டும். பின்னர் சற்றே குறையும். மழையின் அளவு அதிகமாக இருந்தாலும் நீர் வீணாக கடலில் கலக்கும். எல்லைப் பகுதியில் பதற்ற நிலை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளால் தவிர்க்கப்படும். விவசாயம் செழித்தாலும் பயிர் பாதுகாப்பு அவசியமாகும். பக்தி மார்க்கத்தில் நாட்டம் ஏற்படும்.