மேஷ லக்ன பலன்கள்
“கேளப்பா மேஷத்தில் ஜெனித்த பேர்க்கு
கெடுதி மெத்த செய்வனடா கதிரோன் பிள்ளை
ஆளப்பா அகம்பொருளும் நிலமும் ஈந்தால்
அவன் விதியுங்குறையுமடா அன்பாய்க்கேளு
கூளப்பா கோணத்தி லிருக்க நன்று
கொற்றவனே கேந்திரமும் கூடாதப்பா
தாளப்பா போகருட கடாக்ஷத்தாலே
தனவானாய் வாழ்ந்திருப்பன் திசையிற் சொல்லே”
பொருள்:-
மேஷ இலக்கனத்தில் பிறந்த ஜாதகர்க்கு சனி பகவான் மிகவும் கொடுமையான பலன்களைக் கொடுப்பார். இவர்கள் மற்றவர்களுக்கு நிலமும், பொருளும் கொடுத்து உதவினால், இவர்களது ஆயுள் பலம் குன்றிப் போகும். கோட்களெல்லாம் கோணத்தில் இருக்க நற்பலன்கள் உண்டாகும். குரு பகவான் கேந்திரத்தில் இருப்பது நல்லதல்ல. முன் சொன்ன போகர் முனி வாயிலாக கூறுகிறேன். இந்த இலக்கனத்தார் தனவானாய் வாழவும் வாய்ப்பு உண்டு. திசா புத்திகளின் பலமறிந்து சரியாய் பலன் கூறுவாயே!
விளக்கம்:
‘கதிரோன் பிள்ளை’ என்பது பானு மைந்தனாகிய சனி பகவானை குறிப்பிடும். மேஷ இலக்கனத்தில் பிறந்தவர்க்கு இலக்கினாதிபதி செவ்வாய் ஆவார். இவர்க்குச் சனி பகை என்பதால், “கதிரோன் பிள்ளை கெடுதி மெத்த செய்வார்” என முனிவர் கூறியதைக் காண்க.
இலக்கினாதிபதி செவ்வாய் என்பதால், இவர்கள் மற்றவர்களுக்குப் பொருள் கொடுத்து உதவ வேண்டுமானால், செவ்வாய் பலவீனமாக இருக்க வேண்டும். எனவே தான், முனிவர் இவர்களது ஆயுள் பலம் குறைந்து போகுமெனக் கூறுகிறார்.
செவ்வாய் மேஷ இலக்கனத்துக்கு அஷ்டமாதிபதி என்பதை நினைவில் கொள்க. எந்தக் கிரகமாயிருந்தாலும் அவர்கள் திரிகோணங்களில் இருந்தால் நன்மையை செய்வார்கள். ஆனால், கொற்றவனாகிய சூரியன் கேந்திரமேற தீமை தரும் என்பதை சிறப்பு விதியாக கொள்க.
‘பாவர்க்குக் கேந்திர தோஷமுண்டு’ என்ற விதியின்படி மேற்கூறியவாறு முனிவர் கூறியிருக்கலாம். இந்த லக்ன பலன்கள் அவரவர் திசாபுத்திகளின் வலிமைக்கேற்ப மாறுபடும் என்பதை “திசையிற் சொல்லே” என மறைமுகமாக முனிவர் சுட்டிக் காட்டுவதைக் காண்க.





Leave a reply