அக்னி நட்சத்திர காலத்தில் சுபகாரியங்கள் செய்யலாமா ?

அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம் பிறந்து விட்டால் சுபகாரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்ற கருத்து காலம் காலமாக இருந்து வருகிறது.  பரவலாக மக்களிடம் குறிப்பாகச் சொல்லுவதென்றால் தென் தமிழகத்தை விட வட தமிழகத்தில் இத்தகைய நம்பிக்கை மிக அதிகமாகவே இருக்கிறது. எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் பிரபலமான ஜோதிடர் ஒருவரை என்னிடம் வசைபாடித் தீர்த்தார். காரணம் என்னவென்று நான் கேட்டபோது கத்திரி நேரத்தில் என் மகன் திருமணத்திற்கு நாள் குறித்துத் தந்திருக்கிறார். இவரெல்லாம் ஒரு ஜோதிடரா என்று கூறி தனது வசைபாடலைத் தொடர ஆரம்பித்தார்.

எனக்கு அந்தப் பெரியவரைப் பார்ப்பதற்குப் பாவமாக இருந்தது. காரணம் இவரைப் போலவே எத்தனையோ பேர்கள் கத்திரி தோக்ஷத்தைப் பற்றிய அறியாமையில் இருக்கிறார்கள். உண்மையில் கத்திரி தோக்ஷத்தில் சுபகாரியம் செய்யக் கூடாதா? என்று கேட்டால் ஆம் செய்யக்கூடாது என்ற பதிலையும் கத்தரி தோக்ஷம் என்பது உண்மையில் மக்கள் நினைப்பது போல் அக்கினி நட்சத்திரகாலம் இல்லை என்றும் சொல்ல வேண்டும்.

அப்படியென்றால் கத்திரி தோக்ஷம் என்றால் என்ன என்பது தானே உங்கள் கேள்வி. 

எந்தவொரு சுபநிகழ்ச்சிக்கும் நேரம் குறிப்பது வழக்கம் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் ஒரு லக்னம் ஆட்சியில் இருக்கும். அந்த லக்னத்திற்கு 2வது இடத்திலேயும், 12 இடத்திலேயும் ராகு, கேது, சனி, செவ்வாய், போன்ற பாவ கிரகங்கள் அமர்ந்திருந்தால் அது தான் கத்தரி தோக்ஷ காலம் எனப்படும். இந்தக் காலத்தில் சுபகாரியங்களைச் செய்யக்கூடாது. 

மற்றபடி ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் 21ஆம் நாளிலிருந்து வைகாசி மாதம் 14ம் நாள் வரை உள்ள அக்னி நட்சத்திர காலத்தில் சுபகாரியங்கள் செய்ய சாஸ்திரங்கள் எந்தத் தடையும் விதிக்கவில்லை. சாதாரணமாக நீங்கள் பஞ்சாங்கத்தைப் பார்த்தாலே இக்குறிப்பிட்ட காலத்தில் பல சுபமுகூர்த்தங்க்ள கணிக்கப்பட்டு இருப்பதைப் பார்க்கலாம். 

இப்படிக் கணித்து எழுதிய ஜோதிட சாஸ்திரிகளுக்கு அடிப்படையான இத்தகைய விக்ஷயங்கள் தெரியாமலா கணிதம் செய்கிறார்கள்: இல்லவே இல்லை. அக்னி நட்சத்திர காலத்தில் கிணறு வெட்டுதல், தோட்டம் வைத்தல், மரம் நடுதல், விதை விதைத்தல் போன்ற சுபகாரியங்களைத் தவிர எல்லாவிதமான நல்ல செயல்களையும் செய்யலாம். அதில் தவறில்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top